அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் ஊராட்சி தலைவர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்

அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

Update: 2023-06-09 19:30 GMT


கலந்தாய்வு கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சி நிர்வாக கட்டமைப்பின் செயல்பாடுகளை சரியான வகையில் வழிநடத்த வேண்டும். கிராம ஊராட்சிகளில் அளிக்கப்பட வேண்டிய சேவைகள், நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள், விருப்ப கடமைகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் அமல்படுத்த வேண்டும். நடப்பில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும்.

அரசுக்கு ஒத்துழைப்பு

காலாண்டுக்கு ஒரு முறை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டங்களை நடத்த வேண்டும். இணையவழி வரி வசூல், மனை பிரிவு ஒப்புதல் வழங்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வளர்ச்சி திட்டப்பணிகளை தங்கள் ஊராட்சிகளுக்கு முழுமையாக பயன்படுத்தி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.

இணையதள சேவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க ஊராட்சி பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கிராம சாலை மேம்பாட்டு திட்டம், ஜல்ஜீவன் இயக்கம் போன்ற திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆய்வு செய்ய வேண்டும்

ஊராட்சிகளில் சுகாதாரத்தை பராமரிக்க பொது கழிப்பிடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தினமும் முறையாக குடிநீர் வழங்கப்படுகிறதா?, பழுதடைந்த தெரு விளக்குகள் உடனடியாக சீரமைக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்த ஊராட்சியாக இருப்பதற்கு முனைப்போடு செயல்பட வேண்டும். அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு பாகுபாடு இன்றி கிடைப்பதை ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

மேலும் செய்திகள்