அம்ரித் சரோவர்-நம்ம ஊரு சூப்பரு திட்டங்களின் பணிகளை கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் அம்ரித் சரோவர்-நம்ம ஊரு சூப்பரு திட்டங்களின் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-20 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் அம்ரித் சரோவர் திட்டம் மற்றும் நம்ம ஊரு சூப்பரு திட்டங்களின் கீழ் புதிய குளங்கள் அமைத்தல், குளங்களை புனரமைத்தல், கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட காடூர் பகுதியில் ரூ.6.66 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து நீர்நிலையினை பாதுகாக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். புதுவேட்டக்குடி பகுதியில் ரூ.5.73 லட்சம் மதிப்பீட்டில் 10 ஏக்கர் அளவில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் குளத்தினை பார்வையிட்ட கலெக்டர் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து கூடுதலாக 5 ஏக்கர் நிலம் சேர்த்து அதிகளவு நீர் தேக்கி வைக்கும் வகையில் குளம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். குன்னம் தாமரை குளத்திற்கு நீர் தங்கு தடையின்றி சென்று வருவதற்கு ஏதுவாக நீர் வழித்தடங்களில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும், குளத்திற்கு அருகில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் எனவும் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் குளத்தை சுற்றி தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை கலெக்டர் கற்பகம் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து அகற்றும் பணியினை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழமாத்தூர் ஊராட்சி மருதையான் கோவில் அருகில் திட்டக்குடி நெடுஞ்சாலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டதை பார்வையிட்ட கலெக்டர் அந்த பகுதியில் கழிவுநீர் வெளியேறும் வகையில் கட்டப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் குழி போர்க்கால அடிப்படையில் அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ரோவர் வளைவு அருகே மற்றும் சங்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் வெள்ளந்தாங்கியம்மன் கோவில் அருகே உள்ள வெள்ளந்தாங்கி ஏரியினை சுத்தம் செய்து தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்