விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.;
வளர்ச்சி திட்டப்பணிகள்
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
பின்னர் வானூர் தாலுகா புளிச்சப்பள்ளம் அரசு டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழமை வாய்ந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதை நிறுத்திட வேண்டும்.
புதியதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதிஒதுக்கப்பட்டு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, வகுப்பறைகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
விரைந்து முடிக்க உத்தரவு
இதையடுத்து திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு முதல் காசிப்பாளையம் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.6.85 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் பாலம் சீரமைப்பு பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு புதியதாக 440 வீடுகள் ரூ.23.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, அவர் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அதே பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல்சலாம், துணைத்தலைவர் பாலாஜி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் ஆதிசக்திசிவகுமரிமன்னன், மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்திப் உள்பட பலர் உடனிருந்தனர்.