போளூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

போளூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-12 17:15 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் திண்டிவனம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைய உள்ள அனைத்து வகை வாழை பூங்கா இடத்தை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார்.

மேலும் அங்கு ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து திண்டிவனம்-அத்திமூர் சாலையில் நபார்டு திட்டத்தின் மூலம் புதிதாக கட்டப்பட உள்ள சிறு பாலத்தினையும் ஆய்வு செய்தார்.

இதையடுத்து அத்திமூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.38 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறை புனரமைக்கும் பணியையும் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அத்திமூர் கிராம மக்கள் கலெக்டரிடம், புதிய சிமெண்டு சாலை, பக்க கால்வாய், நீர்த்தேக்க தொட்டி போன்ற அடிப்படை வசதிகள் கோரி மனு அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அப்போது மாவட்ட வன அலுவலர் அருண்லால், செயற் பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி திட்ட அதிகாரி அருண், தாசில்தார் சண்முகம், ஆணையாளர் பரணீதரன், வட்டார வளர்ச்சி அதிகாரி பாபு மற்றும் பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்