அரசு பள்ளியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை கலெக்டர் ஆய்வு

சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-12-02 20:58 GMT

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பவுண்டேசனின் சமூக பொறுப்பு நிதியின் வாயிலாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டு உள்ளது. அதை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

மழைநீரின் அவசியத்தை கருத்தில் கொண்டு, நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பவுண்டேசனின் சமூக பொறுப்பு நிதியின் பங்களிப்புடன் நெல்லை மாவட்டத்தில் முதல் கட்டமாக ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி, தருவை அரசு உயர்நிலைப்பள்ளி, சேரன்மாதேவி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி, பர்கிட்மாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி, சீவலப்பேரி அரசு உயர்நிலைப்பள்ளி, மானூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கம்மாளங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, நல்லம்மாள்புரம் ஆதிதிராவிடர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 10 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்ைப தற்போது பார்வையிட்டோம். இந்த கட்டமைப்பானது 2,200 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது. பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் விழும் மழைநீர் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்படும்.

இந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி நிறைந்த பிறகு எஞ்சிய மழைநீர் அருகில் அமைக்கப்பட்டு உள்ள மழைநீர் உறிஞ்சும் தொட்டியில் உறிஞ்சு குழாய் மூலம் பூமிக்கடியில் அனுப்பப்படும். இந்த மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு மூலம் மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படும். மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சேமிக்கப்படும் மழைநீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக மழைநீர் சேகரிப்பு தொட்டியின் மேற்பகுதியில் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழாயை அழுத்தும்போது தொட்டியில் உள்ள நீர் நமது பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. மேலும் இதுபோன்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப்பதன் வாயிலாக சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு கலெக்டர் விஷ்ணு கூறினார்.

தொடர்ந்து வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அவர் பார்வையிட்டார். அங்கு பழைய கட்டிடத்தையும் பார்வையிட்டு விவரம் கேட்டறிந்தார். முன்னதாக சேரன்மாதேவி துணை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சேரன்மாதேவி, பத்தமடை, பிராஞ்சேரி, காருக்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 59 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்