மழைநீர் கால்வாய்களை கலெக்டர் ஆய்வு
மேட்டு இடையம்பட்டியில் மழைநீர் செல்லும் கால்வாய்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
மேட்டு இடையம்பட்டியில் மழைநீர் செல்லும் கால்வாய்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
வேலூர் அடுக்கம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுஇடையம்பட்டி கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுடுகாட்டுக்கு போகும் வழியில் ஓட்டேரி ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாய் குறுக்கே உள்ளது. மழைக்காலத்தில் நீர் அதிகளவில் வரும்போது, அந்த கால்வாய் வழியாக யாரும் செல்ல முடியாத சூழல் உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டால் கால்வாயில் மிகவும் சிரமப்பட்டு உடல்களை சுடுகாட்டு எடுத்துச் செல்ல வேண்டிய அவலம் உள்ளது.
இதுதொடர்பாக கிராம மக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கலெக்டரிடம் புகார் அளித்திருந்தனர்.
அதன்படி வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஓட்டேரி ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாய்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கிராம மக்கள் மழைக்காலங்களில் தங்களின் சிரமத்திற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சிறுபாலம் அமைக்க உத்தரவு
இதையடுத்து மழைநீர் கால்வாய் குறுக்கே சிமெண்டு பைப்பாலான சிறு பாலம் அமைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து துத்திப்பட்டு கிராமத்தில் கல்பந்தலில் தக்காளி சாகுபடி மற்றும் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அவர் ஆய்வு செய்தார். மேலும் துத்திக்காடு கிராமத்திலும், நாகநதி ஆற்றின் அருகே அமைந்துள்ள சுடுகாட்டுக்கு செல்லும் வழியிலும் மழைநீர் கால்வாய் செல்வதால் அந்த இடத்தில் இரும்பாலான சிறு பாலம் அமைக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து சின்ன பாலம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பாலாத்துவண்ணான் கிராமத்தில் நடைபெற்று வரும் இயற்கை விவசாயத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.
இதையடுத்து அத்தியூர் ஊராட்சி மற்றும் புலிமேடு கிராமத்திலும் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மழைநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய்களில் ஆய்வு செய்ததுடன், அங்கு சிறுபாலங்கள் அமைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர் பூங்கொடி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, ஒன்றியக்குழு தலைவர்கள் அமுதாஞானசேகரன், திவ்யாகமல்பிரசாத், ஒன்றியக்குழு துணை தலைவர்கள் கஜேந்திரன், மகேஸ்வரிகாசி, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ் பாபு, ராஜன்பாபு, கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன், தாசில்தார்கள் ரமேஷ், செந்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருநாவுக்கரசு, ரவிச்சந்திரன், வெங்கடேசன், பாபு, அண்ணாமலை, கவிதாசிவகுமார், விஜயலட்சுமிமுரளிதரன், துணை தலைவர் தென்போஸ்கோ, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சுந்தர்ராஜன், வருவாய் ஆய்வாளர்கள் உலகநாதன், ரஜினிகாந்த் உள்பட பலர் உடன் இருந்தனர்.