ஊராட்சி மன்ற பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு

காவேரிப்பாக்கம் ஊராட்சி மன்ற பதிவேடுகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.

Update: 2023-04-18 18:41 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திபட்டு, வேகாமங்கலம், சிறுகரும்பூர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பராமரிக்கபட்டு வரும் பதிவேடுகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊராட்சிகளில் 31 வளர்ச்சி திட்டப் பணிகளின் வரவு செலவு கணக்கு பதிவேடுகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் 7 பதிவேடுகளையும் பார்வையிட்டார்.

மேலும் வீட்டு வரி வசூல் பதிவேடுகள். தண்ணீர் வரி பதிவேடுகள். கிராமத்தில் பட்டா வழங்கி வீடு கட்டித்தரும் திட்டத்தின் பதிவேடுகள். அதற்கான நிதி முடிவு குறித்த கணக்குகள், வரி வசூல் செய்யப்படும் பதிவேடுகள், ஆதிதிராவிடர் மக்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கு நிதி உதவி வழங்கிய பதிவேடுகள். வருகை பதிவேடுகள், மின் கட்டணம் செலுத்திய பதிவேடுகள், வளர்ச்சி திட்டப் பணிகளில் வரவு செலவு தனித்தனி பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அது குறித்து அலுவலர்களிடம் விசாரித்தார்.

இதை தொடர்ந்து வீட்டுவரி, தண்ணீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை முறையாக வசூல் செய்ய அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சைபுதீன், தண்டாயுதபாணி, ஒன்றிய பொறியாளர் ஏகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமணி (வேகாமங்கலம்) மோகனசுந்தரம் (அத்திபட்டு), தமிழ்ச்செல்வி (சிறுகரும்பூர்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்