கோரம்பள்ளம் உப்பாற்று ஓடை புனரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

கோரம்பள்ளம் உப்பாற்று ஓடையில் நடந்துவரும் புனரமைப்பு, வெள்ளப்பாதுகாப்பு கட்டுமானப்பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-05-20 19:00 GMT

கோரம்பள்ளம் உப்பாற்று ஓடையில் நடந்துவரும் புனரமைப்பு, வெள்ளப்பாதுகாப்பு கட்டுமானப்பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உப்பாற்று ஓடை

தூத்துக்குடியில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கோரம்பள்ளம் குளம் உபரிநீர் போக்கியில் (உப்பாற்று ஓடை) வெள்ளப்பெருக்கு காரணமாக கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் அலுவலகப் பகுதி, மறவன்மடம், அந்தோணியார்புரம். சுப்பிரமணியபுரம், பெரியநாயகிபுரம். திரு.வி.க நகர், எஸ்.எஸ்.நகர், காலாங்கரை, அத்திமரபட்டி, வீரநாயகத்தட்டு, முத்துநகர், முத்தையாபுரம், கோவில்பிள்ளை நகர் ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

இதுபோன்ற பாதிப்புகள் வராமல் தடுக்க ரூ.5 கோடி மதிப்பீட்டில், கோரம்பள்ளம் குளம் உபரிநீர் வெளியேறும் உப்பாற்று ஓடையில் சிறிய பாலங்கள், உள்வாங்கிகள் ஆகியவற்றை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் அந்திமரப்பட்டி மற்றும் ஜே.எஸ். நகர் குடியிருப்புகளில் வெள்ளப் பெருக்கை தடுக்க கூடுதல் உள்வாங்கி கட்டுதல் மற்றும் வெள்ளப் பாதுகாப்பு சுவர் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன.

கலெக்டர் ஆய்வு

மேலும் பருவ மழை காலத்தில் உப்பாற்று ஓடையில் உள்வாங்கிகள் மற்றும் சிறுபாலங்கள் வழியாக வெள்ள நீர் குடியிருப்புகளில் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் வடிகால் பணிகளுக்கு ஷட்டர் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது பொது பணித்துறை (நீர் வளம்) செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் சுபாஷ், உதவி பொறியாளர் ரத்தினகுமார் உள்பட பலர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்