நியாய விலைக்கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணியை கலெக்டர் ஆய்வு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நியாய விலைக்கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடுவதற்காக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.
அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க குடும்ப அட்டைதாரர்களுக்கு கார்டு ஒன்றுக்கு ஒரு முழு பன்னீர் கரும்பு கொள்முதல் செய்ய ரூ.2 கோடியே 59 லட்சத்து 36 ஆயிரத்து 878 பெறப்பட்டது.
கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்திட திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் துறை அலுவலர்களை கொண்டு கொள்முதல் குழு அமைக்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
தொடர்ந்து திருவண்ணாமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இருந்து கூட்டுறவு நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்பட்டிருந்த கரும்பின் அடி மற்றும் தரத்தினையும், நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள அரசு மாணவர் விடுதியினையும் ஆய்வு செய்தார். அப்போது உணவின் தரம், விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, உணவு பொருட்கள் இருப்பு விவரம், வருகை பதிவேட்டின் படி மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
அப்போது திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் (பொறுப்பு) நடராஜன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.