வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

கோலியனூர், கண்டமங்கலம் ஒன்றியங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-09-11 17:34 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் இளங்காடு ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் தனிநபர் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பண்ணை குட்டையின் பயன்கள் குறித்து கேட்டறிந்ததோடு அந்த பண்ணை குட்டையை சுற்றி மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்கும்படி அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து அதே பகுதியில் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளதை பார்வையிட்டு விவசாயியிடம் இதன் பயன்கள், செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்ததுடன் மரவள்ளிக்கிழங்கின் விளைச்சல், சந்தைப்படுத்துதல் குறித்தும் கேட்டறிந்தார்.

கண்டமங்கலம்

அதன் பின்னர் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கெங்கராம்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் அமிர்தகுளத்தை பார்வையிட்டு சரியான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். தொடர்ந்து, கெங்கராம்பாளையம் ஊராட்சியில் தண்ணீரின் தரம் சோதனை செய்யப்படுவதை (அமிலத்தன்மை, காரத்தன்மை) கலெக்டர் மோகன் பார்வையிட்டு நீரினை ஆய்வு செய்யும்போது நீரில் உள்ள பி.எச். மதிப்பு, காரத்தன்மை, கடினத்தன்மை, குளோரைடு, இரும்பு உப்பு, அம்மோனியா ஆகியவை எந்தளவு விகிதத்தில் உள்ளன, நீரில் எந்தளவு பி.எச். அளவு இருந்தால் நீர் குடிப்பதற்கு உகந்தது எனவும் கேட்டறிந்தார். பின்னர் நவமால்மருதூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் மரங்களுக்கிடையே அகழி வெட்டும் பணியை பார்வையிட்டார். கண்டமங்கலத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், பாரம்பரிய நெல் விதைகளை கலெக்டர் மோகன் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சண்முகம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்