வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்

Update: 2023-05-23 18:45 GMT

சின்னசேலம்

காரனூர் ஊராட்சி

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரனூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நூலககட்டிடம், ரூ.5½ லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட கட்டுமான பணிகள் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், ஒப்பந்தகாலத்திற்குள் பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்தக்காரர்கள் மற்றும் ஊராட்சிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் உலகங்காத்தான்-குதிரைசந்தல் கிராமங்களை இணைக்கும் பாலம் மற்றும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்த கலெக்டர் சாலையில் பள்ளம் தோண்டி அதன் தரத்தை ஆய்வு செய்த அவர் பணிகளை தரமாக மேற்கொள்ள ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார்.

உலகங்காத்தான் கிராமம்

பின்னர், உலகங்காத்தான் கிராமத்தில் செல்வம் என்பவரின் கூரை வீட்டில் தரையில் அமர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணி அடையாள அட்டையை ஆய்வு செய்த கலெக்டர் ஷ்வரன்குமார் பணிக்கான முழு ஊதியம் வழங்கிடவும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வீடு வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அதே பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் கங்கை அம்மன் குளம் புனரமைப்பு பணி, ரூ.3 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலர் தானிய கள பணி, குடிகாடு கிராமத்தில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால் பணி, ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ரேஷன்கடைக்கான இடம் தேர்வு குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஒன்றிய உதவி பொறியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்