ரூ.60 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி
ஜோலார்பேட்டை அருகே ரூ.60 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட பாரத கோவில் முதல் குள்ளகிழவன் வட்டம் வரையிலும், தாமரைக் குளம் முதல் நேதாஜி நகர் வரையிலும் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. எனவே புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி நடவடிக்கை மேற்கொண்டு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தாமரைக் குளம் பகுதியில் சாலைகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி தலைமை தாங்கி சாலைகள் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார்.
ஒப்பந்ததாரர் எக்ஸெல் ஜி.குமரேசனிடம் நெடுஞ்சாலை தரத்திற்கு தரமானதாக சாலை அமைக்க வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர், ஊர் கவுண்டர்கள் கண்ணதாசன், சசிகுமார், ஊர் நாட்டாண்மை சென்றாயன், நகர மன்ற உறுப்பினர் இனியன், ஏலகிரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஹேமாவதி ஜீவா உள்ளிட்ட பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் எக்ஸெல் ஜி.குமரேசன் நன்றி கூறினார்.