ஆயத்த ஆடை நிறுவனங்களில் கலெக்டர் ஆய்வு
ஆயத்த ஆடை நிறுவனங்களில் கலெக்டர் ஆய்வு;
திருப்பூர்
திருப்பூரில் அரசு மானியம் பெற்று தொழில் தொடங்கியுள்ள ஆயத்த ஆடை நிறுவனங்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு செய்தார். தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவிகளை பெற்று நடைபெற்று வரும் தொழில் நிறுவனங்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்படி திருப்பூர் பழவஞ்சிப்பாளையம் பகுதியில் குறு, சிறு நிறுவனங்களுக்கான பொதுவசதி குழும திட்டத்தின் கீழ் மத்திய அரசு மானியமாக ரூ.8 கோடியே 56 லட்சம், மாநில அரசு மானியமாக ரூ.3 கோடி மற்றும் தொழில் நிறுவனத்தின் முதலீட்டுத்தொகையாக ரூ.4 கோடியே 68 லட்சம் என மொத்தம் ரூ.16¼ கோடி மதிப்பில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் தொடங்கப்பட்டு செயல்படுகிறது. அந்த நிறுவனத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
கல்லாங்காடு பகுதியில் புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்து 41 ஆயிரம் மானியத்தில், ரூ.92 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் ஆயத்த ஆடை நிறுவனத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
புதிய தொழில்முனைவோர் திட்டம்
ஆய்வு குறித்து கலெக்டர் கூறியதாவது:-
முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் என்ற மானியத்துடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் மேற்கொள்ள ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை பெறலாம். 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் சுயதொழில்கள் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உதவி பெற மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம். அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படும். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரையும், சேவை மற்றும் வியாபார தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது.
உணவு உற்பத்தி தொழில்
பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் புதிய உணவுப்பொருட்களை தயாரிக்கும் குறு நிறுவனங்கள் தொடங்க மற்றும் விரிவாக்கம் மேற்கொள்ள மாவட்டதொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உணவு உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.