பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-10 16:27 GMT

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையமும், மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறையின் மூலம் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையமும் செயல்பட்டு வருகின்றது.

இந்த மையங்களை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் பணிகள், மீட்பு வசதிகள், தங்கும் வசதி, காவல் உதவி, சட்ட உதவி, மருத்துவ உதவி, மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதை நேரில் கேட்டறிந்தார்.

தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண்களுக்கான பாதுகாப்பினை வலுப்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அடிப்படை வசதிகள்

தொடர்ந்து மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தினை ஆய்வு கொண்டார். அந்த மையத்தில் 18 ஆண்கள், 1 பெண் ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதை பார்வையிட்டு உணவு, குடிநீர், கழிவறை ஆகிய அடிப்படை வசதிகள் சரியான முறையில் உள்ளதா? என அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் திருவண்ணாமலை நகர்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில் அனுமதித்து அவர்களுக்கு சிகிச்சையினை வழங்கி கருணை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்த் மற்றும் டாக்டர், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்