குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கலெக்டா் குமாரவேல்பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது புறநோயாளிகள் பிரிவுக்கு சென்று அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகளை பார்வையிட்டார். நோயாளிகள் பிரிவில் தேவையான அளவு மருத்துவர்கள் இல்லாதது கண்டு உடனடியாக அங்கு கூடுதல் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும், புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் இல்லை எனவும் தெரிவித்தனர். அவர்களிடம் கூடுதலாக டாக்டர்கள் அமர்த்தப்படுவார்கள் என உறுதி அளித்தார். மேலும் அப்பகுதியில் இருந்த கட்டுமான பொருட்களை அகற்ற அறிவுறுத்தினார். தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
இதனையடுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.40 கோடியில் கட்டப்படவுள்ள நவீன மருத்துவமனை கட்டிடங்களின் ஆரம்ப கட்ட பணிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், தாசில்தார் விஜயகுமார், நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமலை, டாக்டர் மஞ்சுநாத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.