குரூப்-4 தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறையில், குரூப்-4 தேர்வு மையத்தில் கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்

Update: 2022-07-24 13:28 GMT
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை -36, குத்தாலம்-8, சீர்காழி- 27 மற்றும் தரங்கம்பாடி- 9 என்று 80 மையங்களில் குரூப்-4 தேர்வு நடந்தது.

இந்த தேர்வினை எழுத மயிலாடுதுறை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 951 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், 20 ஆயிரத்து 324 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 627 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும்பொருட்டு மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாக்களுக்கும் தலா ஒரு துணை கலெக்டர் நிலையில் தேர்வு கண்காணிப்பாளர்கள், 80 தலைமைக் கண்காணிப்பாளர்கள், 7 பறக்கும் படை அலுவலர்கள், 16 சுற்றுக்குழு அலுவலர்கள், 80 ஆய்வு அலுவலர்கள், 84 வீடியோ கிராபர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

கலெக்டர் ஆய்வு

தேர்வில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதியும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதிட தனி அறைகள் மற்றும் தனிநபர் கொண்ட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தவகையில், மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் ஏ.வி.சி. கல்லூரியில் எம்.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வரும் பார்வையற்ற மாணவர் முத்துமாணிக்கம் மாற்று நபர் துணையுடன் தேர்வு எழுதினார். சீர்காழியில் தனியார் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல, திருக்கடையூரில் உள்ள மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். குரூப்-4 தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருந்தது.

சீர்காழி-திருக்கடையூர்

இதேபோல சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், மேலையூர் உள்பட 27 மையங்களில் குரூப்-4 தேர்வு நடந்தது. சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், மண்டல தாசில்தார் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா ஆகியோர் உடன் இருந்தனர். திருக்கடையூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 129 பேர் தேர்வு எழுதினர்.




Tags:    

மேலும் செய்திகள்