ராணிவாய்க்கால் சீரமைப்பு, பாலம் கட்டும் பணிகள்- கலெக்டர் ஆய்வு

தஞ்சை ராணிவாய்க்கால் சீரமைப்பு மற்றும் பாலம் கட்டும் பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-06-01 19:15 GMT

தஞ்சை ராணிவாய்க்கால் சீரமைப்பு மற்றும் பாலம் கட்டும் பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழைநீர் வடிகால் வாய்க்கால்

தஞ்சை மாநகரில் பெய்யும் மழைநீரானது கல்லணைக்கால்வாய் அடியில் அமைக்கப்பட்ட ராணி வாய்க்கால் வழியாக சென்று கீழவாசல் பகுதியில் உள்ள அழகி குளத்துக்கும், அதனைத்தொடர்ந்து அகழி பகுதிக்கும் சென்றது. காலப்போக்கில் மாநகரின் விரிவாக்க பகுதிகளால் இந்த வாய்க்காலில் நீர்வழித்தடம் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போனது.

இந்த நிலையில் அழகிகுளம் சீரமைக்கப்பட்டு சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளித்து வருகிறது. மேலும் இந்த அழகிகுளத்துக்கு நீர்வரத்து பாதையான ராணி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. இதையடுத்து கல்லணைக்கால்வாயின் அடியில் செல்லும் ராணிவாய்க்கால் செல்லும் பகுதியின் அருகே இருந்த இர்வின்பாலம் இடிக்கப்பட்டு புதிய இரட்டைப்பாலம் கட்டப்பட்டது. அப்போது ராணி வாய்க்காலும் புதுப்பித்து கட்ட முடிவு செய்யப்பட்டது.

ராணி வாய்க்கால்

அதன்படி நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆற்றின் குறுக்கே அடியில் இருந்த ராணி வாய்க்கால் கான்கிரீட் மூலம் புதிதாக அமைக்கப்பட்டது. ஆற்றுக்கு வெளிப்பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஆற்றின் ஒரு பகுதியில் மழைநீர் வந்து விழும் வகையில் தொட்டிகட்டப்பட்டு அதில் இருந்து ஆற்றுக்கு அடியில் ராணி வாய்க்கால் வழியாக நீர் சென்று மறுமுனையில் உள்ள தொட்டியில் விழுந்து அங்கிருந்து செல்லும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கல்லணைக்கால்வாய் சாலையில் சிறிய பாலமும் கட்டப்படுகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்த பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மழைநீர் வரும் வழி, ஆற்றுக்கு அடியில் அமைக்கப்பட்ட வாய்க்கால் மற்றும் ஆற்றின் இருபுறமும் அமைக்கப்படும் வடிகால் வாய்க்கால் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் காந்திஜி சாலை வழியாக சென்று அங்குள்ள வாகன நிறுத்துமிடம், ராஜப்பா பூங்கா, மணிக்கூண்டு ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி கோட்ட செயற்பொறியாளர் மோகனா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், ஒப்பந்த பணி மேற்பார்வையாளர் திருமாறன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்