வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-07 18:45 GMT

கமுதி, 

கமுதி அருகே அச்சங்குளம் ஊராட்சியில் வேளாண்மை துறையின் மூலம் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில மேம்பாட்டு பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அச்சங்குளம் ஊராட்சியில் விவசாயிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட கிளஸ்டர்களுக்கு பயன்பாடற்ற நிலங்களை சீரமைத்து விவசாய பணிகளை மேற்கொள்ள உள்ளதை விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பயன்பாடற்ற தரிசு நிலங்களை கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சீரமைத்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் 90-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தேர்வு செய்து விவசாய பணிகளை மேற்கொள்ளாத தரிசு நிலங்களை சீரமைத்து ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறு அமைத்து மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்ப சொட்டுநீர் பாசனங்கள் அமைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற 2 ஏக்கருக்கு மிகாமல் உள்ள 7 விவசாயிகள் வரை ஒருங்கிணைந்த கிளஸ்டர்களாக உருவாக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை பொறுத்தவரை 5 ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளிலும் தரிசு நிலங்களை சீரமைத்து விவசாயிகளுக்கு வேளாண் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்றார். ஆய்வின் போது வேளாண்மை துறை இணை இயக்குனர் சரஸ்வதி, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் நாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்