வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
முதுகுளத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி பணிகள்
முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி தேரிருவேலி ஊராட்சியில் அனைத்து கிராம மேம்பாட்டு திட்டத்தில் காயிதே மில்லத் வீதியில் ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அதே பகுதியில் ராவுத்தர் சாகிப் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம், பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட அறிவுரை வழங்கினார்.
தேரிருவேலி பெரிய கண்மாயில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.8.99 லட்சம் மதிப்பீட்டில் கன்மாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
கலெக்டர் ஆய்வு
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு டாக்டர்களிடம் சிகிச்சை வழங்குவது குறித்தும், மருத்துவ பரிசோதனை குறித்தும் கேட்டறிந்தார். திடல் சிறைபத்தேவன் ஊருணியில் ரூ.119.80 மதிப்பீட்டில் சீரமைத்து கரையை பலப்படுத்தும் பூங்கா அமைக்கும் பணி, முதுகுளத்தூரில் ரூ.242.85 லட்சம் மதிப்பீட்டில் வார சந்தை மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பாண்டி, பேரூராட்சி தலைவர் ஷாஜகான், முதுகுளத்தூர் தாசில்தார் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, தேவப்பிரிய தர்ஷினி, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, பொறியாளர் ஜம்பு முத்துராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் அபூபக்கர் சித்திக் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.