கூட்டுறவு சங்கங்களில் கலெக்டர் ஆய்வு

திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உரம் வினியோகம் தொடர்பாக கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-11-13 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உரம் வினியோகம் தொடர்பாக கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உரம் வினியோகம் மற்றும் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தாார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் பொதுமக்களுக்கு கிடைக்க செய்வது மட்டுமின்றி, விவசாயத்திற்கு தனி கவனம் செலுத்தியும், திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள மேலராங்கியம், பிரமனூர், லாடனேந்தல், மழவராயனேந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயத்திற்கு தேவைப்படும் உரம், இடுபொருட்கள் மற்றும் பயிர் கடன் போன்ற திட்டங்கள் கிடைக்கும் வகையில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, தென்னை, பயறு வகை பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் என 92 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பயிர்களுக்கு தேவைப்படும் யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரக்கடைகள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

உரம் இருப்பு

கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூரியா 11,350 டன், டி.ஏ.பி. 2900 டன், பொட்டாஷ் 820 டன், காம்ப்ளக்ஸ் 5900 டன் இதுவரை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இம்மாதத்திற்கு யூரியா 4600 டன் ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை 1200 டன் வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் யூரியா 1949 டன், டி.ஏ.பி. 438 டன், பொட்டாஸ் 484 டன், காம்ப்ளக்ஸ் 2130 டன் உரங்கள் இருப்பு உள்ளது.

மாவட்டத்தில் கூட்டுறவு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 2022-23 ஆண்டிற்கு ரூ.200 கோடி அளவிற்கு பயிர் கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயிர் கடன்

இம்மாதம் 10-ம் தேதி வரை 7720 விவசாயிகளுக்கு ரூ.42.22 கோடி அளவிற்கு கே.சி.சி. பயிர் கடனும், 1246 விவசாயிகளுக்கு ரூ.12.06 கோடி அளவிற்கு கே.சி.சி. விவசாய நகைகடன்களும், 10,552 நபர்களுக்கு கே.சி.சி. கால்நடை பராமரிப்பு கடன் ரூ.39.04 கோடி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 19518 நபர்களுக்கு கே.சி.சி. கடன் ரூ.93.32 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் 6246 புதிய உறுப்பினர்களுக்கும் கே.சி.சி. கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ஜீனு, துணை பதிவாளர் பாலச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பாலராஜா, திருப்புவனம் வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரமகாலிங்கம், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன், தாசில்தார் கண்ணன் மற்றும் கூட்டுறவு, வேளாண்மை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்