வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

பர்கூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-07-30 18:05 GMT

பர்கூர்

கலெக்டர் நேரில் ஆய்வு

பர்கூர் ஊராட்சி ஒன்றியம் பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி, சூலாமலை, அஞ்சூர் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ.1 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்தின் கட்டுமான பணியை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து சூலாமலை ஊராட்சியில் மக்கும், மக்காத குப்பை தரம் பிரிக்கும் கொட்டகை பணிகள், சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

அலுவலர்களுக்கு உத்தரவு

மேல்கொட்டாய் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு கட்டுமான பணிகள், சம உயர வரப்பு அமைக்கும் பணி, குமரன்குட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்தான நீர் உறிஞ்சிக்குழியை ஆய்வு செய்தார். பின்னர், அஞ்சூர் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிட கட்டுமான பணி, செந்தாரப்பள்ளி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடராமகணேஷ், சுப்பிரமணி அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா வெங்கடேசன். துணைத்தலைவர், லட்சுமி பிரியா, ஒன்றிய பொறியாளர்கள் அந்தோணி ஆசைதம்பி, பெரியசாமி, செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்