கிருஷ்ணகிரி நகராட்சியில்டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி நகராட்சி டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி நகராட்சி டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் கலெக்டர் சரயு ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி ராசு வீதி அரசு ஆரம்ப பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு சமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது, உணவுகளை தரமாகவும், ருசியாகவும் சமைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ராசுவீதி பகுதியில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு சிகிச்சை முகாமை கலெக்டர் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். மேலும், தனி நபர்களின் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தண்ணீர் சேமித்து வைக்கும் கேன்கள் மற்றும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் தூய்மையாகவும், தரமாகவும் உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார். அப்போது, தண்ணீரை மூடி வைத்து பயன்படுத்தவும், டெங்கு கொசு உற்பத்தியாகாத வகையில் சுற்றுபுறத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்து கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சிறப்பு வகுப்பு
மேலும் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை பார்வையிட்டார். அப்போது நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என டாக்டர், செவிலியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற ஏதுவாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதை கலெக்டர் பார்வையிட்டார். மாணவர்கள் இச்சிறப்பு வகுப்புகளை பயன்படுத்திக்கொண்டு நல்ல முறையில் கல்வி பயின்று 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்.
மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் தங்களது பாட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். மாணவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்ற பாடத்திட்டங்களை கண்டறிந்து சிறப்பு வகுப்புகளில் அப்பாடத்தை சிறப்பாக கற்று அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்
இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையாளர் வசந்தி, தாசில்தார் விஜயகுமார், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் முத்து மாரியப்பன், வட்டார மருத்துவ அலுவலர் இனியாள் மண்டோதரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.