போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்-கலெக்டர் தகவல்

மத்திய அரசின் காலிப்பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-14 18:45 GMT

மத்திய அரசின் காலிப்பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

போட்டி தேர்வு

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் சிவகங்கை கலெக்டர் அலுவலக மயில்கேட் அருகில் உள்ள படிப்பு வட்டத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது மத்திய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள போட்டி தேர்விற்கான அறிவிப்பில் சுமார் 7,500 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற மே 3-ந்தேதி ஆகும். பதிவிகளுக்கேற்ப 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். சிறப்பு பிரிவினர்களுக்கு விதிமுறைகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே, மாவட்டத்தை சேர்ந்த தகுதியான வேலைநாடுனர்கள் மேற்காணும் தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி வகுப்புகள்

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை படிப்பு வட்டத்தில் தொடங்கப்பட்டு, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்பட உள்ளது. மேற்காணும், தேர்விற்கு விண்ணப்பம் செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற விரும்பும் வேலைநாடுனர்கள் 04575-240435 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது பெயரினை கட்டணமில்லாமல் இலவசமாக பதிவு செய்யலாம். இந்த இணையதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசினால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள், வினா-விடைகள் மற்றும் புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்