பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு
பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.;
பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று முன்தினம் இரவில் திடீரென சென்றார். அங்கு அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு போன்ற இடங்களில் அவர் ஆய்வு செய்தார். இரவு நேரத்தில் டாக்டர்கள் பணியில் இருக்கிறார்களா? நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருத்துவத்துறையினரின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஆஸ்பத்திரி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும், எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் பணியாற்ற வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும், இரவு நேர பணிக்கு வரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை முறையாக கண்காணிக்கவும், குடிநீர், கழிப்பிட வசதி, மின்சார வசதி போன்றவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.