தேனி விளையாட்டு விடுதி வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு
மாநில கபடி, கூடைப்பந்து போட்டிகளில் வெற்றிபெற்ற தேனி விளையாட்டு விடுதி வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், குடியரசு தினத்தையொட்டி மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 5-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்தது. இதில் தேனி மாவட்ட விளையாட்டு விடுதியின் வீரர்கள் கபடி மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் கபடி போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், கூடைப்பந்து போட்டியில் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து தேனி திரும்பிய வீரர்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து, கலெக்டர் முரளிதரன் பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.