கடலூரில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தேசியக்கொடி ஏற்றுகிறார்

குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளதையொட்டி, கடலூரில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தேசியக்கொடி ஏற்றுகிறார்.

Update: 2023-01-25 19:52 GMT

இந்திய நாட்டின் குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 8.05 மணி அளவில் குடியரசு தின விழா நடக்கிறது. இவ்விழாவிற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, தேசியக்கொடி ஏற்றுகிறார். பின்னர் அவர் திறந்தவெளி ஜீப்பில் சென்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

இதையடுத்து 8.20 மணி அளவில் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கிறார். அதனை தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த போலீஸ்காரர்களுக்கு பதக்கமும், அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்குவதுடன், பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

முன்னேற்பாடு பணி

பின்னர் 8.50 மணி அளவில் பள்ளி மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்நிலையில் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசாரும் அண்ணா விளையாட்டு மைதானம் முழுவதும் நேற்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் கூப்பர் உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

ரெயில்களில் சோதனை

இதற்கிடையே ரெயில்வே போலீசார் நேற்று ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும் கடலூர் மார்க்கமாக வந்த ரெயில்களில் ஏறியும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாக சோதனை செய்தனர். இதுதவிர மோப்ப நாய் உதவியுடன் ரெயில் நிலைய நடைபாதை மற்றும் தண்டவாளங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் முழுவதையும் சோதனை செய்த போலீசார், பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். மேலும் சந்தேக நபர்கள் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் கடலூர் ஆல்பேட்டை, மருதூர் உள்ளிட்ட மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்