நாகர்கோவிலில் கலெக்டர் அரவிந்த் தேசிய கொடி ஏற்றுகிறார்

சுதந்திர தின விழாவையொட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கலெக்டர் அரவிந்த் திங்கட்கிழமை தேசிய கொடியை ஏற்றி, ரூ.5¼ லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Update: 2022-08-14 18:16 GMT

நாகர்கோவில்:

சுதந்திர தின விழாவையொட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கலெக்டர் அரவிந்த்  திங்கட்கிழமை தேசிய கொடியை ஏற்றி, ரூ.5¼ லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

சுதந்திர தின விழா

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா திங்கட்கிழமைவெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. விழாவில் காலை 9.05 மணிக்கு கலெக்டர் அரவிந்த் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். அதன்பிறகு திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் கம்பீரமான அணிவகுப்பு மாியாதையை பார்வையிடுகிறார். பின்னர் மூவர்ண பலூன்களை வானில் பறக்க விடுகிறார்.

தொடர்ந்து விழாவில் மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 22 ஆயிரத்து 261 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அரவிந்த் வழங்குகிறார். பின்னர் போலீஸ் துறை மற்றும் அரசு துறையில் சிறப்பாக பணிபுரிந்த 200 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடக்கிறது. கலை நிகழ்ச்சியில் மொத்தம் 8 பள்ளிகளை சேர்ந்த 500 மாணவ-மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.

1,200 போலீசார்

சுதந்திர தின விழாவையொட்டி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பஸ் நிலையங்கள், முக்கிய பஸ் நிறுத்தங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு அவ்வப்போது சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் யாரேனும் சந்தேகப்படும் படியாக தங்கியுள்ளார்களா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் மேம்பாலங்களில் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை நடந்தது. கடல் வழியாக யாரேனும் மர்ம நபர்கள் ஊடுருவாமல் தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வாகன சோதனை

முக்கியமாக விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு போலீசார் வழக்கமாக ஈடுபடும் வாகன சோதனையும்  இரவு விடிய விடிய நடந்தது. மாவட்டத்தில் பல இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்