குடியரசு தினவிழாவில் கலெக்டர் அரவிந்த் தேசிய கொடி ஏற்றினார்

நாகர்கோவிலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் ரூ.21.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-01-26 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் ரூ.21.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

குடியரசு தினவிழா

நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களில் நேற்று தேசிய கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இதே போல குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நடந்தது.

கலெக்டர் தேசிய கொடியேற்றினார்

விழாவில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு போலீசாரின் கம்பீரமான அணிவகுப்பு தொடங்கியது. அணிவகுப்பை கலெக்டர் அரவிந்த் திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடன் இருந்தார். பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் மூவர்ண பலூன்களை கலெக்டர் அரவிந்த் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் வானில் பறக்க விட்டனர்.

தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த 85 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களையும், 18 போலீசாருக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் அரவிந்த் வழங்கினார். பின்னர் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதில் போலீசார், ஊர்காவல் படை, தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 120 மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 77 ஆயிரத்து 400 நிதி உதவியும் கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

இதேபோல முன்னாள் படை வீரர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வருவாய் துறை சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 62 ஆயிரத்து 530 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

விஜய் வசந்த் எம்.பி.

விழாவில் விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட வன அதிகாரி இளையராஜா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி, ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் சுகந்தி ராஜகுமாரி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், ராஜேந்திரன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் மற்றும் அரசு அதிகாரிகள், டாக்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்