கலெக்டர் அம்ரித் தேசியக்கொடி ஏற்றுகிறார்

ஊட்டியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில், கலெக்டர் அம்ரித் தேசியக்கொடி ஏற்றுகிறார்.

Update: 2023-01-24 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில், கலெக்டர் அம்ரித் தேசியக்கொடி ஏற்றுகிறார்.

குடியரசு தின விழா

நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு குடியரசு தின விழா நடைபெறுகிறது. விழாவில் கலெக்டர் அம்ரித் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து அவர் காவல்துறை, தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி, பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்குகிறார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

1,000 போலீசார் பாதுகாப்பு

குடியரசு தின விழாவையொட்டி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல் பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழாவுக்காக மைதானத்தில் மேடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் மைதானத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் வகையில் அரங்குகளும் அமைக்கப்படுகிறது. விழாவுக்கு வரும் அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சோதனைச்சாவடியில் கண்காணிப்பு

நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கக்கனல்லா, நாடுகாணி, பாட்டவயல், தாளூர், முள்ளி, எருமாடு, குஞ்சப்பனை உள்பட 16 சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது. விழா நடைபெறும் ஊட்டி விளையாட்டு மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், காட்டேஜ்களில் போலீசார் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு சந்தேகத்துக்கிடமான நபர்கள் வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விடுதி உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி, தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், சேரிங்கிராஸ், லவ்டேல் சந்திப்பு ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்