கலெக்டர் அம்ரித் தேசிய கொடி ஏற்றுகிறார்
ஊட்டியில் நாளை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதில் கலெக்டர் அம்ரித் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஊட்டி
ஊட்டியில் நாளை மறுநாள் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதில் கலெக்டர் அம்ரித் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை மறுநாள்(திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா, ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார்.
இதைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் உள்பட பல்வேறு பிரிவில் சிறந்து விளங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
கலைநிகழ்ச்சி
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்ததால், சமூக இடைவெளி விட்டு குறைந்த நபர்களுடன் விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் வழக்கம்போல் கொண்டாட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி பழங்குடியினரின் கலை நிகழ்ச்சி, பள்ளி-கல்லூரி மாணவர்களின் நடனங்கள் இடம்பெறும். மேலும் போலீசாரின் அனிவகுப்பு மரியாதையும் இடம்பெறுகிறது. இதையொட்டி போலீசார் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சில நாட்களாக ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர்.
சோதனை
சுதந்திர தின விழாவையொட்டி நீலகிரி மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதேபோல் மாவட்ட எல்லைகளில் உள்ள 13 சோதனைச்சாவடிகளில் போலீசார் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
மேலும் தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா என்று திடீர் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சுதந்திர தின விழா நடக்கும் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.