விவசாயிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்; அலுவலர்களுக்கு கலெக்டர் ஷஜீவனா அறிவுரை

விவசாயிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தினார்.

Update: 2023-08-23 21:00 GMT

தேனி அருகே ரத்தினம் நகரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கட்டுப்பாட்டில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. அங்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மத்திய அரசின் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் செயல்பாடு, விவசாயிகள் விளைப்பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் பதிவு, விளைபொருட்களின் மாதிரி, தரம் பரிசோதனை, மின்னணு முறையில் ஏலம் விடுதல், விளைப்பொருட்களின் எடையளவு சரிபார்த்து விலைப்பட்டியல் உருவாக்குதல், விளைப்பொருட்களுக்கான தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துதல் அல்லது காசோலை மூலம் பரிமாற்றம் செய்தல் போன்ற பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும் வேளாண் விளைப்பொருட்களை விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடம், இத்திட்டத்தில் மேற்கொண்ட பரிவர்த்தனை, திட்டத்தின் பயன்பாடு, விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். ஆய்வின்போது அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கலெக்டர் வழங்கினார். அப்போது கலெக்டர் கூறுகையில், "விவசாயிகளிடம் அலுவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்டறிய வேண்டும். விதைகள் மாதிரிகளை உரிய முறையில் விவசாயிகளிடம் இருந்து பெற்று, காலதாமதமின்றி ஆய்வு முடிவுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்" என்றார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி, வேளாண் விற்பனைக்குழு செயலாளர் ஆறுமுகராஜன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்