தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு - தரமான சிகிச்சைகளை உறுதி செய்ய டாக்டர்களுக்கு அறிவுறுத்தல்

Update: 2023-06-15 19:00 GMT

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

கலெக்டர் ஆய்வு

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் பல்வேறு சிகிச்சைகளை பெறுவதற்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். இதேபோல் உள் நோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு உள்ள சிகிச்சை பிரிவுகளை பார்வையிட்ட அவர் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உரிய நேரத்தில் தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? சிகிச்சை தரமாக உள்ளதா? என்பதை கேட்டறிந்தார்.

அடிப்படை வசதிகள்

இந்த ஆய்வின்போது குழந்தைகளுக்கான புத்துயிர் அளித்தல் மற்றும் துரித சிகிச்சை பிரிவு, அவசர அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் புற நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.

அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்து செல்லும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனையின் சுற்றுப்புற சுகாதாரம் தொடர்ந்து பராமரிக்கப்படுவதை கண்காணிப்பின் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவக்குமார் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்