புதிதாக பணி நியமனம் பெற்றநிலஅளவர், வரைவாளர்களுக்கு நில அளவீடு பயிற்சிகலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2023-05-28 19:00 GMT

புதியதாக பணி நியமனம் பெற்ற நிலஅளவர் மற்றும் வரைவாளர்களுக்கு நில அளவீடு மேற்கொள்ளும் பயிற்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

நில அளவை துறை

கிருஷ்ணகிரி தாலுகா பையனப்பள்ளி ஊராட்சியில், நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறை சார்பாக புதியதாக பணி நியமனம் பெற்ற நிலஅளவர் மற்றும் வரைவாளர்களுக்கு லிங் செயின் மற்றும் டிஜிட்டல் குளோபல் பொசிசன் சிஸ்டம் மூலம் நில அளவீடு செய்வது குறித்த பயிற்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

வருவாய்த்துறை நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூக பொருளாதார திட்டங்களை செயல்படுத்துவதிலும் நில அளவை துறை முக்கிய பங்காற்றுகிறது.

30 நாட்கள் பயிற்சி

மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலக கட்டிடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், புதிய தாலுகாக்களை உருவாக்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறையில் காலியாக உள்ள நிலஅளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, புதிதாக பணி நியமனம் பெற்ற கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் என மொத்தம் 70 நபர்களுக்கு கிருஷ்ணகிரியில் 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நில வரைபடம்

இந்த பயிற்சியில் நில அளவையை எப்படி மேற்கொள்வது?, நில வரைபடம் தயார் செய்வது, லிங்க் செயின் மற்றும் டிஜிட்டல் குளோபல் பொசிசன் சிஸ்டம் மூலம் நில அளவீடு செய்வது, புலன் எல்லை நிர்ணயம் செய்தல், தனி உட்பிரிவு அளவீடு செய்யும் பணிகள், புலம் முச்சந்தியில் கற்கள் நடும் பணிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பயிற்சியில் கலந்துகொண்ட நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நில அளவை உதவி இயக்குனர் சேகரன், கோட்ட ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், அலுவலக மேலாளர் சரவணன், பயிற்சியாளர்கள் ஜெயகுமார், சிவகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்