தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளைகலெக்டர் ஆய்வுநரிக்குறவர் மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்

Update: 2023-04-30 19:00 GMT

தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நரிக்குறவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி செம்மாண்டகுப்பம் ஊராட்சி பெரிய புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.19.50 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்படும் பணியை அவர் ஆய்வு செய்தார்.

இதேபோல் அந்த பகுதியில் உள்ள நரிக்குறவர் தெருவில் பூதாளப்பன் கோவில் அருகில் ரூ.14.97 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு, 1,500 லிட்டர் தரைமட்ட நீர்தேக்கதொட்டி மற்றும் பைப்லைன் அமைத்தல், புதிய தெருவிளக்கு அமைத்தல், 4 மின்கம்பம் அமைத்தல், சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் இந்த திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குறைகள் கேட்பு

இதனை தொடர்ந்து கோணங்கிநாயக்கனஅள்ளி ஊராட்சி மாரவாடியில் ரூ.17.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மைய கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியையும், செட்டிக்கரை ஊராட்சி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் ரூ.11.79 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் மற்றும் அந்த பகுதியில் ரூ.63.69 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு நரிக்குறவர் தெருவில் உள்ள நரிக்குறவர் மக்களிடம் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்த கலெக்டர் இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது தாசில்தார் ஜெயசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், சத்யா உள்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்