நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு

Update: 2023-04-27 19:00 GMT

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி தொப்பூர் ஊராட்சி உம்மியம்பட்டி கிராமத்தில் 2022-23-ம் ஆண்டு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 2 வகுப்பறைகள் கட்டும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து உம்மியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பழுதடைந்த சமையல் கூடத்தையும், உம்மியம்பட்டி கிராமத்தில் பொதுவினியோக கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தடுப்பு சுவர்

பின்னர் தொப்பையாறு அணை அருகில் கானிகரஅள்ளியில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தடுப்புசுவர் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் இந்த தடுப்பு சுவர் அமைக்கும் பணியினை தரமாகவும், விரைவாகவும் மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஊராட்சி ஒன்றிய கட்டிடம்

இதனைத் தொடர்ந்து நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் 2021-2022-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த அலுவலக கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெய்சங்கர், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், லோகநாதன் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்