கிருஷ்ணகிரியில் குடியரசு தின விழா:கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்ரூ.38.41 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

Update: 2023-01-26 18:45 GMT

கிருஷ்ணகிரியில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.38 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கினார்.

குடியரசு தின விழா

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து சமாதான புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார். விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து 33 சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கலெக்டர் கவுரவித்தார்.

இதனை தொடர்ந்து 20 அரசுத்துறை உயர் அலுவலர்களுக்கு கேடயங்களும், 46 போலீசாருக்கு தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்களையும் கலெக்டர் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் டிரைவர் ஒருவருக்கு தங்கப்பதக்கமும், 198 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் என மொத்தம் 265 பேருக்கு கேடயங்கள், தங்கப்பதக்கம், நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இதை தொடர்ந்து பல்வேறு அரசு துறைகள் சார்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 41 ஆயிரத்து 587 மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார். விழாவில் 7 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், உதவி கலெக்டர் சதீஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், சங்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்