எலந்தகுட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்கலெக்டர் ஸ்ரேயா சிங் திறந்து வைத்தார்

Update: 2023-01-19 18:45 GMT

குமாரபாளையம் அருகே உள்ள எலந்தகுட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் திறந்து வைத்தார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா எலந்தகுட்டை கிராமத்தில் நடப்பு பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் நலன்கருதி நடப்பு காரீப் பருவம் 2022-2023-ல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி கிரேட் –ஏ ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.2,060-ம், ஊக்கத்தொகை ஒரு குவிண்டாலுக்கு ரூ.100 என மொத்தம் ரூ.2,160 கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பொது ரக நெல்லுக்கு ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.2,040-ம், ஊக்கத்தொகை ஒரு குவிண்டால் ரூ.75 என மொத்தம் ரூ.2,115 கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

3 நாட்களில் பணம் வினியோகம்

கடந்த ஆண்டு (2021-2022) காரீப் பருவத்தில் எலந்தகுட்டை நேரடி கொள்முதல் நிலையத்தில் 116 விவசாயிகளிடம் இருந்து 612 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டு காரீப் பருவத்தில் எலந்தகுட்டை நேரடி கொள்முதல் நிலையத்தில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி சுமார் 800 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படும். நெல் கொள்முதல் செய்யப்பட்ட 3 வேலை நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நாமக்கல் மண்டல மேலாளர் யசோதா, துணை மேலாளர் சுந்தரமூர்த்தி, வேளாண்மை துறை துணை இயக்குனர் ராஜகோபால், உதவி இயக்குனர் கலைச்செல்வி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்