நாமக்கல்லில் 57 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் ஸ்ரேயா சிங், ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினர்

நாமக்கல்லில் 57 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் ஸ்ரேயா சிங், ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினர்

Update: 2022-11-07 18:45 GMT

சேந்தமங்கலம் தாலுகா பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, தனியாரிடம் இருந்து இடம் வாங்கி பல ஆண்டுகளுக்கு முன்பாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த வீட்டுமனை பட்டாக்களை வைத்து வங்கி கடனோ, அரசு திட்டங்களின் மூலம் வீடு கட்டவோ முடியாத நிலை இருந்தது.

அதேபோல் மேலப்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் 22 பேருக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னர் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்கள் வரன்முறை செய்யப்படாமல் இருந்தன. அதனால் அங்கும் அதே நிலை நீடித்து வந்தது. தற்போது அரசாணை வெளியிடப்பட்டதன் அடிப்படையில் அவர்களுக்கான இடம் நிலஅளவை செய்யப்பட்டு, கணினியில் விவரங்கள் பதிவேற்றம் செய்து வரன்முறை செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவர்களுக்கு நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த 35 பேருக்கும், மேலப்பட்டியை சேர்ந்த 22 பேருக்கும் என மொத்தம் 57 பேருக்கு நத்தம் பட்டாக்களை கலெக்டர் ஸ்ரேயா சிங், கே.ஆர்.என்‌.ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

மேலும் எருமப்பட்டி அருகே உள்ள சிங்களங்கோம்பையில் கடந்த மாதம் 17-ந் தேதி காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்த கல்லூரி மாணவி ஜீவிதாவின் பெற்றோரான சுரேஷ், கவிதா தம்பதிக்கு, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் மஞ்சுளா, சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்