போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்-பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி:
போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வேண்டுகோள் விடுத்தார்.
குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
இளைய தலைமுறையினர் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, நவீனகால வாழ்க்கையை தொலைத்து பாதிப்புக்கு உள்ளாகின்றனர். போதைப் பொருட்களுக்கு அடிமையாவதால் தனிநபர் மட்டுமல்லாமல் குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாட்டு அலுவலகம் மூலம் 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, போதைப்பொருள் பயன்பாடு வயதானவர்களை விட இளைஞர்களிடையே அதிகமாக உள்ளது.
விழிப்புணர்வு
மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது குறித்து, பள்ளி கல்வித்துறை மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் போதைக்கு அடிமையானவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி தொடர் கண்காணிப்பு மூலம் மறுவாழ்வுக்கான சமூக அந்தஸ்தை உருவாக்க வேண்டும்.
நகர்ப்புறம், கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கு மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்க கூடாது. போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் பொதுமக்களிடையே கலைநிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதைப்பொருள் இல்லாத சமுதாயம்
மேலும், போதைப்பொருள் தடுப்பு சட்ட விதிகள் மூலம் சட்ட விரோத போதைப்பயிர்களின் சாகுபடியால் பாதிக்கப்பட்ட பகுதியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி மேம்பாட்டு திட்டங்களை உருவாக்கி தர வேண்டும். எனவே, பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களில் போதைப்பொருட்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி ஆணையர் குமரேசன், மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) வெங்கடேசன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் பெருமாள் மற்றும் வனத்துறை, காவல்துறை, வேளாண்மைத்துறை, பள்ளி கல்வித் துறை, வட்டார போக்குவரத்து துறை உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.