ஈரோட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ஈரோட்டில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
ஈரோட்டில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
ரேஷன் கடை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட செங்கோடம்பள்ளம் அரசு உயர்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு உள்ள சமையலறை கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்த அவர்கள், அங்கு கட்டப்பட்டு உள்ள சமையலறையை பார்வையிட்டார்.
வீரப்பம்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். வேப்பம்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டார்.
தட்டுவெட்டு கருவி
இதேபோல் வேப்பம்பாளையம் கால்நடை ஆஸ்பத்திரி, கூரபாளையத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி, மாரப்பம்பாளையம் கிராம கூட்டுறவு அங்காடி, பால்கொள்முதல் நிலையம், மேட்டுநாசுவம்பாளையத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ரூ.22 ஆயிரம் மானிய உதவியுடன் பரப்பு விரிவாக்கம் செய்து திசு வாழை அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எலவமலை ஊராட்சி மாரப்பம்பாளையம் பகுதியில் வேளாண்மை- உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானிய விலையில் தட்டுவெட்டு கருவியை ஒருவருக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி உள்பட பலர் உடனிருந்தனர்.