உணவு பொருட்களின் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

உணவு பொருட்களின் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

Update: 2022-10-07 18:45 GMT

உணவு பொருட்களின் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யும் கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசினார்.

கோரிக்கை மனுக்கள்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களின் தரத்தில் உள்ள குறைபாடுகளை போக்குதல், காலாவதியான உணவு வகைகள் பயன்படுத்துவதை தடுத்தல் ஆகியவை குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது:- பேக்கரி உள்ளிட்ட கடைகளில் இனிப்பு மற்றும் கார வகை தின்பண்டங்களில் காலாவதியாகும் தேதி நுகர்வோருக்கு எளிதில் தெரியும் வகையில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களின் காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் அபராதம் விதிக்க வேண்டும். அனைத்து துறை திட்டங்களின் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அந்தந்த துறையின் இணையதள முகவரியை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகர்வோர்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களை முறையாக பரிசீலித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேஷன் கடைகள்

பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருட்களின் தரம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் குறித்து அறிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அனைத்து அரசுத்துறைகளும் நடத்த வேண்டும். இவ்வாறு அவா் பேசினார்.

இந்த கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். அப்போது வாலரைகேட் மற்றும் கரட்டுப்பாளையம் ரேஷன் கடைகளை பிரித்து புதிதாக ரேஷன் கடை அமைக்க, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு மனு அனுப்பியும் எந்தவித பதிலும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாதவாறு பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இதில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், பல்வேறு துறை அலுவலர்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்