நாமக்கல் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பணியை கலெக்டர் ஆய்வு
நாமக்கல் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பணியை கலெக்டர் ஆய்வு
நாமக்கல் கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணியை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காலை உணவு வழங்கும் திட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் முதற்கட்டமாக 50 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 2,586 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. நாமக்கல் நகராட்சியில் நாமக்கல் மஜித் தெரு நகராட்சி உருது தொடக்கப்பள்ளி, கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளி, பதிநகர் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய 3 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 596 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
திருச்செங்கோடு நகராட்சியில் 6 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 738 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். நகராட்சி பகுதிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மைய உணவகத்தில் காலை சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நகராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளிகளுக்கு வாகனம் மூலம் உணவினை தொடர்ந்து சூடாக வைத்திருக்கும் கலனில் (ஹாட் பாக்ஸ்) கொண்டு செல்லப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு உணவு சூடாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 41 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 1,528 மாணவ -மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். நாமக்கல் நகராட்சி கோட்டை தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது காலை சிற்றுண்டி சூடான நிலையில் வழங்கப்படுகிறதா? தேவையான பணியாளர்கள் பணியில் உள்ளனரா? குறிப்பிடப்பட்ட உணவு வழங்கப்பட்டதா? காலை சிற்றுண்டி மாணவர்களுக்கு வழங்கும் முன்னர் ஆசிரியர்களால் ருசி பார்க்கப்பட்டதா? என ஆய்வு செய்தார். மேலும் காலை சிற்றுண்டி சாப்பிட்ட மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஆகிய விவரங்களின் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாணவ, மாணவிகளுக்கு வழங்க தயாரிக்கப்பட்ட காலை உணவின் தரத்தை கலெக்டர் சாப்பிட்டு ருசி பார்த்தார்.