நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் 10 இடங்கள்-கலெக்டர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் 10 இடங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவித்து உள்ளார்.

Update: 2022-08-30 17:43 GMT

நாமக்கல்:

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரசாயன சாயம் பூசக்கூடாது

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்கள், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளின் ஆபரணங்களை தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் மற்றும் எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

கரைக்கும் இடங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள 10 இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

அதன்படி திருச்செங்கோடு தாலுகாவில் எஸ்.இறையமங்கலம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவில் அருகில், குமாரபாளையம் தாலுகாவில் பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஓங்காளியம்மன் கோவில் படித்துறை, புதுப்பாளையம் அக்ரஹாரம் காவிரி ஆர்.எஸ்.ரெயில்வே பாலம் அருகில், பாப்பம்பாளையம் முனியப்பன் கோவில் பின்புறம், கொக்கராயன்பேட்டை பாலத்தின் கீழ் விநாயகர் கோவில் அருகில், குமாரபாளையம் அக்ரஹாரம் கிராமம் பழையபாலம் அண்ணாநகர், கலைமகள் வீதி ஆகிய இடங்களில் சிலைகளை கரைக்கலாம்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில்

இதெபோல் பரமத்தி வேலூர் தாலுகாவில் வேலூர் காசி விஸ்வநாதர் கோவில் அருகில், சோழசிராமணி பேரேஜ் கீழ் பகுதியில் ஈஸ்வரன் கோவில் பின்புறம், மோகனூர் சிவன் கோவில் அருகில் உள்ள காவிரி ஆற்றங்கரை படித்துறை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம். மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 800-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்