சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடன்உதவி கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட தொழில் மையம் சார்பில் மானியத்துடன் கடன்உதவி வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-17 15:45 GMT

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட தொழில் மையம் சார்பில் மானியத்துடன் கடன்உதவி வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன்உதவி

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காகவும், வளர்ச்சிக்காகவும் தமிழக அரசு மானியத்துடன் கூடிய 3 கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் சார்பில் செயல்படுத்தி வருகிறது. அதன்படி புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவைசார்ந்த தொழில்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை தேசியமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25 சதவீத மானியத்துடன் நிதிஉதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொது பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினருக்கு வயது 45-க்குள் இருக்க வேண்டும் மற்றும் கல்வித்தகுதி பிளஸ்-2 வகுப்பு அல்லது அங்கீகாரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற் பயிற்சி சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

25 சதவீத மானியம்

இதேபோல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை தேசியமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25 சதவீத மானியத்துடன் நிதி உதவி வழங்கப்படும்.

பாரதபிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.50 லட்சமும், சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினருக்கு 15 சதவீத மானியமும், கிராமப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு நகர்ப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியமும், கிராமப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் இத்திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்