பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் கலெக்டர் திடீர் சோதனை- நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டார்
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் கலெக்டர் திடீர் சோதனை- நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டார்
ஈரோடு
பெருந்துறையில் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. கொரோனா சிகிச்சை மையமாகவும் இது விளங்குகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நேற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினார்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த பரிசோதனை மையம், மருந்துஅறை உள்ளிட்ட பிரிவுகளுக்கு நேரில் சென்று சோதனை செய்தார். அப்போது சிகிச்சையில் இருந்த நோயாளிகளை சந்தித்த கலெக்டர், சிகிச்சை மற்றும் கவனிப்பு குறித்து கேட்டு அறிந்தார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடமும் கேட்டார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருந்துகளையும் கலெக்டர் பார்வையிட்டார். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை பார்வையிட்ட கலெக்டர் அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.
இந்த ஆய்வின் போது மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் மணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.