உண்டியல் காணிக்கை மூலம் ரூ.8 லட்சம் வசூல்
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.8 லட்சம் வசூலானது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.8 லட்சம் வசூலானது
பிரசித்தி பெற்ற நாகதோஷ வழிபாட்டுத் தலங்களில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தினமும் உள்மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் வந்து செல்கிறார்கள். ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நாகதோஷ பரிகாரங்களுக்காக தங்கம், வெள்ளியை பக்தர்கள் நேர்ச்சையாகவும் செலுத்துவது வழக்கம். பணமாகவும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவார்கள்.
இந்த கோவிலின் உண்டியல் காணிக்கை 3 மாதத்துக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலையில், உதவி ஆணையர் தங்கம் மேற்பார்வையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் குமரி மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறநிலையத்துறை ஆய்வாளர் சரஸ்வதி, சூப்பிரண்டு ஆனந்த், ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன், அலுவலக மேலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். உண்டியல் காணிக்கை வருமானமாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்து 615-ம், 226 கிராம் வெள்ளியும், 4 கிராம் 800 மில்லி தங்கமும் கிடைத்துள்ளது என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.