3 நாட்களில் 200 சாதுக்களின் கைரேகைகள் சேகரிப்பு
வெளியூர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் திருவண்ணாமலையில் சாதுக்கள் போர்வையில் தங்கியிருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து 200 சாதுக்களிடம் போலீசார் கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து சாதுகங்களிடம் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
வெளியூர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் திருவண்ணாமலையில் சாதுக்கள் போர்வையில் தங்கியிருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து 200 சாதுக்களிடம் போலீசார் கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து சாதுகங்களிடம் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் தங்கி வசித்து வருகின்றனர்.
பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் வெளியூர்களில் இருந்து சாதுக்கள் போர்வையில் சிலர் வந்து கிரிவலப்பாதையில் தங்கி பணம் வசூலில் ஈடுபடுவதாகவும், பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வருபவர்களும் சிலர் கிரிவலப்பாதையில் காவி உடை அணிந்து கொண்டு ஒரு வாரம், 10 நாட்கள் என தங்கி விட்டு செல்வதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
மேலும் வெளிப்பகுதியில் இருந்து சாதுக்கள் போர்வையில் வருபவர்கள் கிரிவலம் வரும் பக்தர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவது, மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
அதனால் கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாதுக்களை முறைப்படுத்துவதற்காகவும், சந்தேக நபர்கள் எவரேனும் உள்ளனரா என்று கண்டறியவும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த 28-ந் தேதி முதல் கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாதுக்களிடம் கைரேகைகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
நேற்று வரை தொடர்ந்து 3 நாட்களில் 200 சாதுக்களிடம் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ''கிரிவலப்பாதையில் தங்கியுள்ள 250 சாதுக்களின் கை ரேகைகள் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதியதாக பலர் கிரிவலப்பாதையில் சாதுக்கள் போன்று தங்கியுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் தற்போது மீண்டும் கைரேகை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 3 நாட்களில் 200 பேரில் கைரேகைகள் சேரிக்கப்பட்டு உள்ளது.
குற்ற வழக்கில் தொடர்பா?
இந்த கைரேகைகளை கொண்டு அவர் ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டு உள்ள கைரேகைகளுடன் ஒத்து போகின்றதா, புதியவர்கள் என்றால் அவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா என்று கண்டறியப்பட்டு, அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ற விவரங்ககள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. இந்த கைரேகை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்'' என்றனர்.