தொண்டு நிறுவனம் பெயரில் நன்கொடை வசூல்; கர்நாடக வாலிபர்கள் கைது
குமரியில் தொண்டு நிறுவனம் பெயரில் நன்கொடை வசூல் செய்த கர்நாடக வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்:
குமரியில் தொண்டு நிறுவனம் பெயரில் நன்கொடை வசூல் செய்த கர்நாடக வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொண்டு நிறுவனம் பெயரில்...
குளச்சல் அருகே கீழ்கரை கணியான்விளையை சேர்ந்தவர் வேலாயுதன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 32), எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் இவர் வீட்டில் இருந்த போது 2 வாலிபர்கள் வந்தனர்.
அப்போது நாங்கள் கோயம்புத்தூர் சிங்காரபாளையத்தில் உள்ள உடல் ஊனமுற்றோர் சமூக நல வாழ்வு தொண்டு நிறுவனத்தில் இருந்து வருகிறோம். அவர்களின் நலனுக்காக நன்கொடை தருமாறு கேட்டனர். இவர்களுடைய பேச்சில் சந்தேகமடைந்த விக்னேஷ், வாலிபர்கள் கையில் வைத்திருந்த நன்கொடை புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
2 பேர் கைது
அதில் 2 வாலிபர்களும் கோவை தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் இல்லை என தெரிய வந்தது. மேலும் வாலிபர்கள் வைத்திருந்த நன் கொடை புத்தகமும் போலியானது என்பதை விக்னேஷ் அறிந்தார்.
பின்னர் அவர் பொதுமக்கள் உதவியுடன் 2 பேரையும் பிடித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் பிஜப்பூர் குந்தவன் பகுதியை சேர்ந்த சச்சின் திலீப் ஜெகதாப் (24), பிஜப்பூர் மெலடியை சேர்ந்த பாரத் லெட்சுமணன் சவான் (26) என்பதும், இவர்கள் கடந்த 8 மாதமாக தோவாளை பகுதியில் தங்கியிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இதேபோல் தொண்டு நிறுவனத்தின் பெயரில் நன்கொடை வசூல் செய்தது தெரிய வந்தது.
பின்னர் அன்றைய தினம் வசூல் செய்த ரூ.2 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.