பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் -ஐகோர்ட்டு தீர்ப்பு
பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும், நன்கொடைக்கு வரி விலக்கு பெற முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.;
சென்னை,
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை, யுனைடெட் கல்வி அறக்கட்டளை, எம்.ஏ.சி. பொது அறக்கட்டளை உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து அறக்கட்டளையின் பெயரில் நன்கொடை வசூலித்தது. அவ்வாறு வசூலித்த நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை ஆணையர் வரி விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் கல்வி நிறுவனங்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த தீர்ப்பாயம், 'அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி வசூலிக்க முடியாது' எனக்கூறி, வருமான வரித்துறை ஆணையரின் உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டது.
விலக்கு இல்லை
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வருமான வரித்துறை ஆணையர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. இருதரப்பு விவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வி வழங்குதல் என்பது ஒரு புனிதமான சேவை ஆகும். கல்வியை பணம் சம்பாதிக்கும் தொழிலாக பார்க்கக்கூடாது. கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் நன்கொடைக்கு வருமான வரிச்சட்டப்பிரிவு 11-ன்படி வரிவிலக்கு பெற முடியாது. அந்த நன்கொடைகளுக்கு கட்டாயம் வரி விதிக்கப்படும்.
நன்கொடை குற்றம்
மாணவர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பு தடை சட்டத்தின் 1992-ன்படி தாமாக முன்வந்தோ, நன்கொடையாக செலுத்தி இருந்தாலோ அல்லது அறக்கட்டளையின் பயன்பாட்டிற்காக பெறப்பட்டிருந்தாலோ அது சட்டப்படி குற்றமாகும். எனவே நன்கொடையை அறக்கட்டளையின் வருமானமாகத்தான் பெற முடியும்.
மாணவர்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்கு எதிராக தமிழக அரசு சட்டம் கொண்டு வந்திருக்கும் நிலையில், கல்வி நிறுவனங்கள் நன்கொடை பெறுவது சட்டவிரோதம் மட்டுமல்லாமல், தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.
கல்வி நிறுவனங்கள் வசூலித்த தொகைகள் நன்கொடையே என்று ஆதாரங்கள் மூலம் வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரி நிரூபித்துள்ளார்.
ஆய்வு செய்யலாம்
எனவே, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. கல்வி நிறுவனங்கள் வசூலித்த நன்கொடை தொகைக்கான, வருமான வரியை உரிய முறையில் கணக்கிட்டு வசூலிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது குற்றம்தான்.
அதனால் முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கணக்குகளை, ஆதாரங்கள் மற்றும் சட்டத்துக்கு உட்பட்டு வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரி மறு ஆய்வு செய்யலாம்.
மேலும், கல்வி நிறுவனங்களில் நன்கொடை இல்லாமல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்.
இணையதளம்
மேலும், நன்கொடை வசூலிப்பதை தடுக்கவும், இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இணையதளம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் எந்தெந்த கல்லூரிகள் நன்கொடை வசூலிக்கின்றன என்பதை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
அந்த இணையதளம் தேசிய தகவல் மையத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும். அதுகுறித்த விவரங்களை மாணவர் சேர்க்கையின்போது மாநில அரசுகள் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்.
சமவாய்ப்பு
ஒவ்வொரு மாநிலமும் கல்வி உரிமைக்காக சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. அதன்படி, மாநில அரசுகள் கல்வி வழங்காததால், அரசு பள்ளிகளை விட்டுவிட்டு குழந்தைகளின் பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடுவது வேதனை அளிக்கிறது.
கல்வியை பொறுத்தமட்டில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.