இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கொள்ளிடம் அருகே கோதண்டபுரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதோட்டியை விரைவாக இடித்து அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே கோதண்டபுரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதோட்டியை விரைவாக இடித்து அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி
கொள்ளிடம் அருகே கோதண்டபுரம் கிராமத்தில் 30 ஆண்டுகள் பழமையான மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்ளது. இதன் மூலம் கோதண்டபுரம், வள்ளலார்நகர், சின்னதெரு, பெரியதெரு, உடையார்குடி, சாவடிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள 300 குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆவதால் சேதம் அடைந்த காணப்படுகிறது. குடிநீர் தொட்டியின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.
இடிந்து விழும் அபாயம்
ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த குடிநீர் தொட்டியின் அருகில் மேல்நிலைப்பள்ளி இருப்பதால் மாணவ-மாணவிகள் இந்த வழியாக சென்று வருகின்றனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அகற்ற வேண்டும்
உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை உடனடியாக இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.